தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வுகள் மற்றும் பாதுகாத்தல் செயற்பாடுகளை கையாள்வதில் பாகுபாடு காண்பிக்கவில்லை. தெற்கினைப் போன்ற வடக்கு, கிழக்கினையும் அணுகின்றோம் என்று தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ;ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.
உருத்திரபுரம் சிவன் கோவில் மற்றும் நிலாவரைப் பகுதிகளில் தொல்பொருள் சான்றுகளைக் கண்டறிந்து பாதுகாப்பதற்காகவே அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதே தவிர, குறிப்பிட்ட இனத்தினையோ மதத்தினையோ இலக்கு வைத்து எவ்விதமான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் அண்மைய நாட்களில் தொல்பொருளியல் அதிகாரிகள் கிளிநொச்சி உத்திரபுரம் சிவன் கோவில் மற்றும், நீர்வேலி நிலாவரைப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளைச் செய்வதற்கு முயற்சிகளை எடுத்திருந்த நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிங்கள,பௌத்த ஆக்கிரமிப்பின் வடிவமாகவே இந்த விடயத்தினை பார்ப்பதாக அந்த முயற்சிகளுக்கு எதிராக போராடிய மக்களும், அரசியல்,சிவில் சமூகத் தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் தொல்பொருளியல் திணைக்களப்பணிப்பாளரிடத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.