ஜேர்மனியில், புகலிடம் மறுக்கப்பட்ட 100 இற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இந்த வாரம் நாடு கடத்தப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர்களைத் தேடிப் பிடித்து, கைது செய்யும் நடவடிக்கைகளை ஜேர்மனியின் சிறப்பு சட்ட அமுலாக்க அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நோட்ஹெய்ன் – வெஸ்ட்போலன், மற்றும் பாடென் – வுட்டம்பேர்க் ஆகிய இடங்களிலேயே பிரதானமாக இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சிறிலங்காத் தமிழர்கள், எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதும், பதிவுகளை புதுப்பிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து அதற்காக சென்ற போதும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் இருப்பிடம் பற்றிய சரியான தகவல்கள் வெளிவருவது தடுக்கப்பட்டுள்ளது.
டுசெல்டோப் விமான நிலையத்தில், 31 வரையான ஈழத்தமிழர்கள் நாடு கடத்துவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பிராங்போர்ட்டில் 50 பேரும், , ஸ்ரூட்கார்ட் நகரில், 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.