மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று, ஒரே நாளில் 114 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது இன்று மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும் என்றும் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் மின் ஆங் ஹேலிங் (Gen. Min Aung Hlaing) கூறிய மறுநாள், இந்த மிருகத்தனமான தாக்குதல் நடந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் மீது 44 நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, 114 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
மாண்டலே நகரில், சுட்டுகொல்லப்பட்ட 29 பேரில் ஐந்து பேர் இளையவர்கள் என்றும் கூறப்படுகிறது.
யங்கோன் நகரில், குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த பெப்ரவரி 1-ஆம் நாள் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், இதுவரை 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.