சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரை, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பகுதியின் 446 தசம் ஆறு ஹெக்டயரிலுள்ள கொழும்புத் துறைமுக நகர் விசேட பொருளாதார வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் 269 ஹெக்டயர், கடல் நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகும்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, இந்த வலயத்தின் நிருவாகப் பொறுப்பு, கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
ஐவருக்கு மேற்பட்ட, எழுவருக்குக் குறைந்த ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் இந்த ஆணைக்குழுவின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிதியத்திற்குச் செல்லும்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஏழு சட்டங்கள், இந்த விசேட பொருளாதார வலயத்திற்குப் பொருந்தாது எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.