அண்மையில் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுபவர்கள், அல்லது குறித்த அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் சிறிலங்காவுக்கு வந்தால், உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும், 400 இற்கும் அதிகமான தனிநபர்களையும் கறுப்புப்பட்டியலில் சேர்த்து, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, கடந்த 25ஆம் நாள் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள், சிறிலங்காவில் செயற்பட்டாலோ, அல்லது சிறிலங்காவுக்கு வந்தாலோ, கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும், அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பிலவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, புலம்பெயர் அமைப்புகள் மீது சிறிலங்கா அரசாங்கம் விதித்துள்ள தடை குறித்து ஆராய்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விடயம் தான் என்றும் கூறியுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இது குறித்து விரைவில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.