யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவரான சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
” கொரோனா தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் 10 நாள்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட நாட்களுக்குள் வர்த்தகர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை சுகாதாரப் பிரிவினரிடம் கையளித்த பின்னர், வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்.
பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
கொரோனா தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளிலேயே தங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தொற்றை கட்டுப்படுத்துவது சுலபம் என்பதால், அங்கு விரைவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்” என்றும், சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட 12 பேருக்கு, வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கொரோனா அச்சுறுத்தலை அடுத்து யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று தொடக்கம் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.