நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தீவிர விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்க தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பேசவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் காவல்துறை நிலையம் அழைக்கப்பட்டார்.
மல்லாகம் காவல்துறை வலயத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர்.
தவிசாளர் பெருமளவானவர்களைத்திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தவிசாளர், தொல்லியல் திணைக்களம் எற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது. ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டினர்.
அந்த இடத்தில் கட்டடங்கள் ஏதாவது அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வு பார்வையிட நான் சென்றேன்.
அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள். இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன்.
அதற்கு காவல்துறை தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதிபெறவேண்டியதில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பல்வேறு வினாக்கள் தொடுக்கப்பட்டு சுமார் மூன்று மணித்தியாலங்கள் தவிசாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் தொல்லியல் திணைக்கள பணிகளில் தலையீடு செய்வதை தவிசாளர் நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் விடயம் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.