யாழ்ப்பாணம் – நிலாவரையில் சிறிலங்கா இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட அகழ்வுப் பணிகளை தடுத்தமை தொடர்பாக, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து, இன்று பிற்பகல், அச்சுவேலி காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலாவரைப் பகுதியில் பௌத்த சின்னங்கள் இருப்பதாக கூறி, அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் தம்மைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அச்சுவேலி காவல்துறையில் முறையிட்டுள்ளனர்.