வன்கூவர் பகுதியில் உள்ள நூலகத்தில் கடந்த சனிக்கிழமை, கத்தியால் குத்தி பெண் ஒருவரைக் கொலை செய்து, மேலும் 6 பேரைக் காயப்படுத்திய நபர் மீது காவல்துறையினர் கொலை குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
28 வயதுடைய யன்னிக் பன்டாகோ (Yannick Bandaogo) என்ற நபருக்கு எதிராகவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, வன்கூவர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் 20 வயதுக்கு மேற்பட்டவர் என்று கூறியுள்ள காவல்துறையினர் அவரது பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிடவில்லை.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆறுபேரும் உயிராபத்தில் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் காயப்படுத்திக் கொண்டதால், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த குறித்த நபரின் பின்னணி மற்றும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.