ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் தேவையற்ற பீதியை ஏற்படுத்த முயல்வதாக, சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,
“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கும், றோம் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவில்லை என்பதால், சிறிலங்கா படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்த முடியாது,
எதிர்க்கட்சியினர் நடைமுறைச் சாத்தியமற்ற வகையில், ஜெனிவா தீர்மானம் குறித்து தேவையற்ற பீதியை ஏற்படுத்த முனைகின்றனர்.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் அனுமதியுடன் மட்டும் தான், அவ்வாறான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவோ அல்லது சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவோ முடியும்.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட ரஷ்யாவும், சீனாவும் சிறிலங்காவுக்கு ஆதரவாக உள்ளதால், எந்தச் சூழ்நிலையிலும், சிறிலங்காவுக்கு நெருக்கடி ஏற்படாது.
சீனாவும் ரஷ்யாவும் இருக்கும் போது. ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவ்வாறான எந்த நடவடிக்கையும் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படாது என்று 100 வீதம் உறுதியாக கூற முடியும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.