யாழ்ப்பாண நகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 800 மாதிரிகள் தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்காக வடக்கு சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாநகரில், நவீன சந்தை மற்றும் பொதுசந்தையில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் நேற்று முன்தினம் மாதிரிகள் பெறப்பட்டன.
இவ்வாறு பெறப்பட்ட 800 மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் முடிவுகள் இன்று கிடைக்கும் என்றும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கலாம் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் 21 பேருக்கும் வவுனியா, முல்லைத்தீவில் தலா 2 பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் என வடக்கில், 26 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று 382 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாண ஆய்வு கூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.