யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகங்களின் குரலை நெரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
ஒரே நாளில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், இணைய ஊடகச் செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர், கடுமையான விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் ரியூப் இணையத்தளம் மற்றும் ரியூப் தமிழ் வலையொளி தொலைக்காட்சி ஆகியவற்றை இயக்கிய, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஊடக நிறுவனத்தில், நேற்றுக்காலை சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த ஊடகங்களின் பணிப்பாளர் என்று கூறப்படும் 35 வயதுடைய பெண் ஒருவரையும், 36 வயதுடைய ஆண் ஒருவரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்து மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தமிழீழத் தேசியத் தலைவரின், உரைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்தி அவர்களின் கொள்கைகளை இவர்கள் ஊக்குவித்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
தேடுதல் நடத்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து ஐந்து கணினிகளும், ஐந்து மடிகணினிகளும், கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான சுலக்சன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று கொழும்பிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும், தடை செய்யப்பட்ட ஒருவருடன் முகநூல் நட்பில் இருந்தமை தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் மூன்று மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் ஊடகவியலாளர் சுலக்சன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரே நாளில் தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் ஊடகங்களின் பணியாற்றுவோர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.