இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாட்டுப் படகுகளில் குறிப்பிட்டளவு இந்திய மீனவர்களை, மீன்பிடிக்க அனுமதி அளிக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது என்று கொள்கை ரீதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்யாகும்.
அவ்வாறான எந்த முடிவு குறித்தும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடவில்லை.
இது தொடர்பான எந்த அமைச்சரவை முன்மொழிவும் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.