ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள கனேடியப் படையினர் மேலும் ஒரு ஆண்டுக்கு அங்கு தங்கியிருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஈராக்கிலும் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும், 850 கனேடியப் படையினர் நிலை கொண்டிருப்பார்கள் என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜான் (Harjit Sajjan) தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் ஈராக்கில் நிலைகொண்டுள்ள கனேடிய படையினரின் நடவடிக்கைக்கான கால எல்லை முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஈரானின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையிலும், தெஹ்ரானின் பின்புலத்துடன் இயங்கும் ஷியா தீவிரவாதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வரும் கவலையளிக்கத்தக்க சூழலிலும் கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.