மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயரும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வந்தவருமான, இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று அதிகாலை தனது 80 ஆவது வயதில் காலமானார்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக ஓய்வில் இருந்த இராயப்பு யோசேப்பு ஆண்டகை, யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் தற்போது யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு எடுத்துச் செல்லப்படும், இராயப்பு யோசேப்பு ஆண்டகை, உடல், வரும் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராயப்பு யோசேப்பு ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக, 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
போர்க்காலங்களில், தமிழ் மக்களின் துயர் தீர்க்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயற்பட்ட அவர், தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வந்த அட்டூழியங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், இறுதிப் போர்க்கால மீறல்கள் தொடர்பாக, நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கிய முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் உறுதியாகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.