ஒன்ராறியோ மாகாண பெற்றோர் ஏப்ரல் 26ஆம் நாள் தொடக்கம், மற்றொரு சுற்று நேரடிக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்கி (Stephen Lecce) தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர், கொரோனா சூழலில் குழந்தைகளின் நலனுக்காக, பெற்றோர்களுக்கான நேரடிக் கொடுப்பனவுக்கு டக் போர்ட் அரசாங்கம், 980 மில்லியன் டொலரை 2021 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்காலத்தில் பெற்றோர்களுக்கு ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்ய உதவும் வகையில் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இதற்கமைய, பிறந்த குழந்தை தொடக்கம், 12 ஆம் வகுப்பு வரை கற்கும் சிறுவர்களுக்கு, தலா 400 டொலர் வழங்கப்படவுள்ளது.
21 வயதுக்கு உட்பட்ட சிறப்புத் தேவையுள்ள சிறுவர்களுக்கு 500 டொலர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை ஒன்ராறியோ அரசாங்கம், குழந்தைகளுக்கான சிறப்பு கொடுப்பனவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.