சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பான, 2020 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், 2020 பொதுத் தேர்தலில் சர்வதேசத்தின் பார்வையையும் குறைந்த உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பையும் தடுத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை காரணம் காட்டி செய்யப்பட்ட கட்டுப்பாடற்ற பிரச்சாரச் செலவுகள், அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற விடயங்கள் இடம்பெற்றதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதற்கு பொறுப்பேற்றுள்ள காவல்துறையினர், பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்புகளை கையாள கைது அதிகாரம் இல்லாமல் அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றும், தெரிவித்துள்ளது.
நீதித்துறை மற்றும் சுயாதீன அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும், 20 ஆவது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேறியுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்ற அமைப்புகளுக்குரிய நியமனங்கள் வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவசரகால நிலை காலாவதியான போதும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி மூலம், இராணுவத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.