முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவு, தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர் என்றும், மக்களோடு மிகவும் நெருங்கிப் பழகிய அவர், இக்கட்டான அனைத்து கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களிற்காக முன்னின்று போராடிய ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன மத மொழிகளிற்கப்பால் சாதாரண மக்களின் உரிமைகளிற்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம். என்றும், மக்களின் உரிமைகளிற்காக போராடிய மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதோடு, ஆண்டகையின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், தெரிவித்துள்ளார்.
ஆயரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா அரசு தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை இன அழிப்பு மூலம், 2009 மே 18 இல் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், தமிழ்த் தேசத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கோரி, சர்வதேச பொறுப்புக்கூறலை எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்தி, தமிழ் சிவில் சமூக அமையத்தினூடாக ஆண்டகை தலைமை வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளது.
குருத்துவத்தின் புனிதத்தையும், மேன்மையையும் தாங்கி, ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் உண்மையானதும் நீதியானதுமான பொறுப்புக்கூறலுக்காக, பேராயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. என்றும், அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை கறுப்புக் கொடியைப் பறக்க விட்டு, ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆயரின் பூதவுடலுக்கு, இன்று காலை அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.