ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மான விடயத்தில், வடகொரியா, எரித்திரியா போன்று சிறிலங்காவினால் செயற்பட முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மோதல்போக்கின் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள அவர், விமர்சிப்பவர்களை எதிரிகள் என குற்றம்சாட்டினால், சிறிலங்கா எதனையும் சாதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மனித உரிமை தொடர்பான அனைத்து பிரகடனங்களிலும் சிறிலங்கா கைச்சாத்திட்டு அதனை ஏற்றுக் கொண்டுள்ளதால், எரித்திரியா போலவோ, வடகொரியா போலவே சிறிலங்காவினால் நடந்து கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் தடைகளை விதிக்க முடியாது என்றும், நாடுகள் தனித்தனியாக தடைகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அத்தகைய தடைகள் பொதுமக்களை பாதிக்க கூடாது என்றும் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.