இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சிசேல், வர்ஜின் தீவில் மறைத்து வைத்ததுபோல இனி நாட்டுக்குள்ளேயே மறைத்துவைக்க தனி நாடொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு போர்ட் சிட்டி தொடர்பாக வௌியாகியுள்ள சட்டமூல ஆவணம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பு போர்ட் சிட்டி தொடர்பில் வௌியாகியுள்ள சட்டமூலத்தை பார்க்கும் போது அமெரிக்காவில் புசோடோரிகா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் காணப்படும் கட்டமைப்பே உள்ளது. இதன்மூலம் கொன்பெடரல் நிலை உருவாகும்.
வரிச் சலுகை வழங்க இலங்கையில் தேவையான சட்டம் உள்ளது. ஆனால் தற்போது இலங்கை நாட்டுக்குள் வேறு ஒரு நாட்டை உருவாக்க முயற்சிக்கின்றனர். இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சிசேல், வர்ஜின் தீவில் மறைத்து வைத்ததுபோல இனி போர்ட் சிட்டியில் மறைத்து வைக்க முடியுமான அளவு சட்டத்தை உருவாக்கியுள்ளனர். அப்படி இல்லையேல் வௌிநாட்டு கருப்பு பணத்தை போர்ட் சிட்டியில் பதுக்கி வைக்க வசதி ஏற்படுத்தியுள்ளனர்.
இலங்கை அரசியல் யாப்பின் 76வது சரத்தின் படி சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.