கொரோனா வைரஸ் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வெளியாகவில்லை என்பதை உறுதியாக நிராகரிக்க மேலதிக ஆய்வுகள் தேவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வெளியானமைக்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அது தொடர்பான மேலதிக ஆய்வுகள் அவசியம் என அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tetros Adanom) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச நிபுணர் குழுவும் இணைந்து ஆராய்ந்த ஆய்வு அறிக்கையில், வுஹான் ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளவாலிடம் இருந்து மற்றுமொரு விலங்கு வழியாக கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த வைரஸ் வெளவாலிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவி இருக்கவும் வாய்ப்புள்ளது.
எனினும் ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானமைக்கு சிறிதளவு சாத்தியமேனும் இல்லை என உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச நிபுணர் குழுவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.