மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் திருவுடலுக்கு பெரும் எண்ணிக்கையானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று அதிகாலை காலமான ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உடல், நேற்று தொடக்கம், யாழ். ஆயர் இல்ல மரியன்னை சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன் போது, யாழ் மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர், யாழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருக்கள், அருட் சகோதரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 11 மணி வரை ஆயரின் திருவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் இன்று மதியம், இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் திருவுடல், மன்னாருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் ஓய்வுநிலை ஆயரின் திருவுடல் நாளை மறுநாள் மாலை மன்னார் செபஸ்தியார் தேவாலயத்தில் நடைபெறும், இறுதித் திருப்பலிக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் திருவுடலுக்கும் பெருமளவு மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.