மன்னார் மறைமாவட்ட, மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். ஆயர் இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் யாழ். ஆயர் இல்லத்தில் இடம்பெற்று இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
அங்கு அரசியல் பிரமுகர்கள், மதகுருமார், சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஆயருடைய திருவுடல் நாளை காலை 11 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை மதியம் மன்னாருக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி கிரியைகளுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை,ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, தமிழ் மக்கள் சார்பான நலன்கள் தொடர்பாகவே அதீத அக்கறை கொண்டவர் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மக்களின் புனிதவாரம் அனுஷ்டிக்கப்படும் இந்த வாரத்தில் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறையடி சேர்ந்தமையானது அவரின் இறை வாழ்க்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் அடக்கம் செய்யும் நாளை துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் திங்கட்கிழமை வரை தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோசப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அடக்கப்பட்ட நேரத்திலும் ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்ட ஆயரும் தமிழ்த் தேசியத்தின் மீது அளவிலா பற்றுக்கொண்டவருமான இராயப்பு ஜோசப் அவர்களின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும் தமிழ் மக்களின் விடியலுக்காகக் குரல்கொடுத்து வந்த ஒரு ஆன்மீகக் குரல் மௌனித்து விட்டது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஆயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு எமக்கும் தமிழ்த் தேசத்திற்கும் ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.