சிங்கராஜ வனப்பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் யோசனையை யுனெஸ்கோ அமைப்பு நிராகரித்துள்ளது.
சிங்கராஜ வனப்பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் அமைத்து, நாட்டின் தெற்கு பகுதிக்கு குடிநீர் விநியோகத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமர் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
உலக மரபுரிமையான சிங்கராஜ வனப்பகுதியில் 5 ஹெக்டேயருக்கு அதிகமாக காடழித்து, நீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு பல்வேறு மட்டத்திலும் எதிர்ப்புகள் மேலெழுந்த நிலையில், அரசாங்கம் யுனெஸ்கோ அமைப்பிடம் ஆலோசனை கோரியிருந்தது.
இந்நிலையில், சிங்கராஜ வனப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் அமைப்பது சாத்தியமில்லை எனக்கூறி, யுனெஸ்கோ அமைப்பின் இலங்கைக்கான செயலாளர் திட்ட யோசனையை நிராகரித்துள்ளார்.
திட்டத்தின் மூலம் சிங்கராஜ வனத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை நீர்ப்பாசன அமைச்சரிடம் எடுத்துக்கூறியதைத் தொடர்ந்து, அமைச்சரும் இதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக யுனெஸ்கோ அமைப்பின் சிறிலங்காவுக்கான செயலாளர் புன்சிநிலமே மீகஸ்வத்த தெரிவித்துள்ளார்.
சிங்கராஜ இயற்கை வனம் 1988 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.