கடந்த 29 ஆம் திகதி திருகோணமலை-சர்தாபுர பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை காவல்துறையினர் விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து பிரேதப்பெட்டியை வைத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை-கண்டி பிரதான வீதி சர்தாபுர பகுதியில் இவ்வார்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த நபருடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதே நாளில் குறித்த சாரதியை காவல்துறையினர் விடுதலை செய்துள்ளதாகவும் தெரிவித்த பொது மக்கள் இறந்தவரது குடும்பத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து இடம் பெற்றதை அடுத்து உயிரிழந்தவரின் வீட்டுக்கு போக்குவரத்து காவல்துறையினர் வருகை தந்து காரின் சாரதியின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25, ஆயிரம் ரூபா வழங்கியதாகவும் இப்பணத்தை வைத்துக்கொள்ளுமாறும் காவல்துறையினர் கூறியதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.
இவ்விபத்து இடம்பெற்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அப்பணத்தை பெற்றுக்கொடுப்பது நீதியா எனக் கோரியும் தீர்க்கமான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் பிரதான வீதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மிக நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுள்ளதையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இவ்விபத்தில் திருகோணமலை கப்பல்துறை ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனிமுத்து அந்தோணிசாமி என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.