ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கமைய, சாட்சியங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான விசாரணைகளை ஐ.நா தொடங்கவுள்ள விவகாரத்தை, அரசாங்கம் பாரதூரமானதாக எடுத்துக் கொண்டுள்ளது என்று சிறிலங்கா வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “ சிறிலங்காவில் உள்ளவர்களையும், சிறிலங்காவையும் விட வேறு யாரும் அதிகளவில் மனித உரிமைகளில் ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் ஒரு தலைமுறையாக போர் செய்தோம் என்று கூறியுள்ள அவர், காயங்களை முழுமையாக ஆற்றுவதற்கு காலம் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செவ்வியின் போது, சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை படுகொலை செய்ததாக, குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சிறிலங்கா ஜனாதிபதியினால், வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அட்மிரல் கொலம்பகே கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
எனினும், சிறிலங்கா ஜனாதிபதி ஒருபோதும் குற்றவாளியின் பக்கம் நிற்கமாட்டார் என்று மட்டும் குறிப்பிட்ட அவர், ஆயிரக்கணக்காக தமிழ் போராளிகள் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.