ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்காக மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் ஆராதனைகளில் பங்கேற்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தேவாலயத்திற்கும் தனித்தனியே பாதுகாப்பு வழங்குவது மிகவும் கடினம் என்பதனால் காவல்துறையினருக்கு மேலதிகமாக இராணுவமும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பை வழங்கும் செயற்பாடுகள் இந்த வார தொடக்கத்தில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் அவர்கள் முன்வைத்த பரிந்துரைகளை ஆய்வு செய்ய பெப்ரவரி 19 ஆம் திகதி அமைச்சரவை துணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.