சிறிலங்காவில் நாளை ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் பாதுகாப்புக்காக 12 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று, காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக, இந்தப் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்கள், விடுதிகளை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாலேயே இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, 9 ஆயிரத்து 365 காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும், 2 ஆயிரத்து 522 முப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நீர்கொழும்பு, சிலாபம், மற்றும் மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களில், சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.