சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக, வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இந்த விடயம் தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சிறிலங்கா கடற்பரப்பில், நூற்றுக் கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு போன்ற பகுதிகளின் மீனவர்களின் தொழில் முறைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது முக்கியமானது.
எனவே, வடக்கில் உள்ள மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு முடிவுக்கும் வரவேண்டுமே தவிர, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் விரும்பியவாறு முடிவுகளை எடுக்க கூடாது” என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.