ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் உள்ள வாக்குரிமையே சிறிலங்காவுக்கு சவாலாக உள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னரான சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து, கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நீண்டகால நடவடிக்கையாக, சிறிலங்காவின் நிலைமை குறித்த, உண்மைகளை ஏனைய நாடுகளுக்கு விளக்கிக் கூறுவதற்கு, அரசாங்கம் மீண்டும் நடவடிக்கை எடுக்கும்.
நாடுகளின் ஒத்துழைப்பை வென்றெடுக்க, சர்வதேச மட்டத்தில் நாட்டின் நிலைமையை நாங்கள் எடுத்துக் கூறுவோம்.
இதற்கு முக்கியமான தடையாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாக்குகளே இருக்கின்றன.
அந்த நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளன.
ஆனால் அண்மையில் மனித உரிமை மீறல்கள் எதுவும் இல்லை. அவர்கள் சில சம்பவங்களை அறிக்கையிட்டுள்ளனர்.
அவை துல்லியமான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
எனவே, நாங்கள் உண்மையில் இந்த விடயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.