ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் உருவாக்கப்படவுள்ள நிபுணர் குழுவில் சிறிலங்காவுக்கு இடமளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் எலிசபெத் துரோசெல் (Elizabeth Trocell) இது குறித்து தகவல் வெளியிடுகையில்,
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தகவல்கள், ஆதாரங்கள் சேகரிப்பது உள்ளிட்ட, ஆணைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து குழுவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஆராய்ந்து வருகிறது.
தீர்மானத்தில் வழங்கப்பட்டுள்ள ஆணைகளை நிறைவேற்றுவதற்கு, ஐ.நா.வின் வரவுசெலவுத் திட்ட செயல்முறைகளுக்கு இணங்க, ஜெனிவாவை மையமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் குழு நிறுவப்படும்.
இந்த குழுவில் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
ஆனால் சிறிலங்கா அரசு உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் இணைந்து செயற்படுவதில், இந்த நிபுணர் குழு உறுதியுடன் இருக்கும்.
இந்த நிபுணர் குழு, சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதற்கு தற்போதைய நடைமுறைகளுக்கு அமைய, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூலமாக அனுமதி கோரப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.