யாழ்ப்பாணம்- கல்லுண்டாய் பகுதியில் நேற்றிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். நகர பகுதியில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் இளைஞன் ஒருவர், கல்லுண்டாய் வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வழிமறித்த கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
காயமடைந்த அவர், அலைபேசி மூலம் அராலியில் உள்ள தனது நண்பனுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக உந்துருளியில் சம்பவ இடத்திற்கு சென்ற போது, நண்பனையும் அந்த மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதன்போது, இரண்டாவது இளைஞன் மீது கத்திக்குத்தும் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இருவரும், மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.