சிறிலங்கா சரியான வழியில் பயணிக்க வேண்டுமாகவிருந்தால் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் சர்வதேசத்திடமே நீதிகோரி நிற்கின்றோம், சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கின்றோம். இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளை தெரிவித்ததாக நான் அறியவில்லை.
தமிழ் மக்களுக்கு நாங்கள் பாரிய எதிர்பார்ப்பினை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் வழங்கிய எதிர்பார்ப்புகளுக்கு அமைய அந்த விடயங்கள் நடக்காததன் காரணமாகவே விரக்தி நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனநிலையில் உள்ள விரக்தி நிலையும் அதுதான். சர்வதேசம் எங்களை கை விட்டு விட்டது என்ற கருத்துக்களை அவர்கள் முன்வைப்பதற்கும் இதுதான் காரணம்.
உண்மையை சொல்லவேண்டுமாகவிருந்தால் சர்வதேசம் தமிழர்களை கைவிடவில்லை. நாங்கள் தான் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கின்றோம்.
இந்த உண்மையை நாங்கள் சொன்னால் இவர் அரசாங்கத்திற்காக பேசுகின்றார் என்று எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். நாங்கள் அரசாங்கத்திற்காக பேசவில்லை. உண்மையைத்தான் சொல்கின்றோம்.
பொய்யான எதிர்பார்ப்பினை வழங்குவது என்பது பிழையான விடயமாகும். 30ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் உள்ள நிலையில், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவேன் என்ற எதிர்பார்ப்பினை ஒரு தாய்க்குக் கொடுப்பது என்பது மிகவும் கொடுமையான செயல்.
நீதி கிடைக்க வேண்டும்,குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.அதற்கு இயன்றதை நாங்கள் செய்வோம்.உண்மையைச் சொல்வது ஒருபோதும் துரோகச்செயல் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.