சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் பதுங்கித் தாக்குதலில், 5 இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுக்மா மற்றும் பிஜாப்பூர் எல்லையில் டாரென் (Tarren) பிராந்தியத்தில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கோப்ரா எனப்படும், சிறப்பு கொமாண்டோக்கள் உள்ளிட்ட 400 இந்திய பாதுகாப்பு படையினர் மீது நக்சல் தீவிரவாதிகள் இன்று நண்பகல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டையில் சிறிய ரக மோட்டார்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மோதல்கள் 3 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த மோதல்களில், 2 நக்சல்களும், ஒரு கோப்ரா கொமாண்டோ உள்ளிட்ட 5 இந்திய பாதுகாப்பு படையினரும், உயிரிழந்துள்ளனர்.
மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களை மீட்பதற்கு இந்திய இராணுவத்தின் 3 உலங்குவானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.