சிறிலங்காவில் பலத்த இராணுவ, காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைகள் தேவாலயங்களில் இடம்பெற்றுள்ளன.
உயிர்த்த ஞாயிறு திருநாளை முன்னிட்டு சிறிலங்கா முழுவதிலும் உள்ள 1944 தேவாலயங்களிலும், 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் முப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் இன்று இடம்பெற்ற பிரார்த்தனைகளில் பெரும் எண்ணிக்கையான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்திலும், இன்று சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை உள்ளிட்ட இடங்களிலும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.