சிறிலங்கா அரசாங்கத்துக்கு நொந்து விடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என கூறாதீர்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது என மட்டக்களப்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுமந்திரன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள, சிவாஜிலிங்கம்,
“இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை. சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் ஒரு விடயம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்லாது வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடும் தான் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1977ம் ஆண்டிலிருந்து சிறிலங்காவில் இனப்படுகொலை இடம்பெற்றதற்கு பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
1965ம் ஆண்டு காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கூட இனப்படுகொலை நடந்தது தொடர்பான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனுக்கு இனப்படுகொலை தொடர்பில் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
எனவே ஒரு இனத்தை தெரிவு செய்து படுகொலை செய்ய நினைப்பதை இனப்படுகொலை என்று நிரூபிக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.