ஆபிரிக்க நாடான மாலியில், ஜிஹாதி தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடக்குப் பகுதியில், ஐ.நா அமைதிப்படையுடன் இணைந்து பணியாற்றும் சாட் நாட்டைச் சேர்ந்த படையினர் தங்கியுள்ள முகாம் மீது ஜிஹாதி தீவிரவாதிகள் இன்று அதிகாலை 6 மணியளவில் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
சிக்கலான இந்த தாக்குதலை ஐ.நா அமைதிப்படையினர் முறியடித்து, தீவிரவாதிகளை விரட்டியடித்துள்ளனர் என்றும், இந்த தாக்குதலில் மேலும் 19 அமைதிப்படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியொ குடெரெஸ், ஐ.நா அமைதிப்படையினர் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றங்களாக கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.