சிட்னியில் உள்ள ஹாக்ஸ்பரி ஆற்றில் படகொன்று தீப்பிடித்து வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையிலும் உள்ளனர்.
ஹாக்ஸ்பரி ஆற்றில் ஒரு படகு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு 12 அம்புலன்ஸ் குழுவினர், ஒரு சிறப்பு மருத்துவ குழு மற்றும் இரண்டு உலங்கு வானூர்தி உள்ளிட்ட அவசர சேவைப் பிரிவினரும் விரைந்து சென்றுள்ளனர்.
விபத்தில் சிக்குண்ட எட்டுப் பேர் மீட்கப்பட்டதுடன், அருகிலுள்ள வைத்தியசாலைக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு நோயாளிகளின் உடலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.