யாழ்ப்பாணம், மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிகளை சிறிலங்கா இராணுவத்தின் 52வது டிவிசன் தளத்துக்காக சுவீகரிப்பதற்கு இன்று முன்னெடுக்கப்படவிருந்த நில அளவீடு பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், குறித்த பகுதியில் சுவீகரிப்புக்கான நில அளவீட்டை மேற்கொள்ளச் சென்ற போது, காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் திரண்டு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் நில அளவீடு செய்வதை நிறுத்த நில அளவையாளர் திணைக்கள அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்ததால், முற்பகல் 10.30 மணி முதல் 11 மணி வரையில், ஏ-9 வீதியை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால், ஏ-9 வீதி வழியாக வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து, நில அளவீட்டு முயற்சியை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.