இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் வானூர்திகள் விற்பனை செய்யப்பட்ட போது, பிரான்ஸ் நிறுவனத்தினால் இந்திய நிறுவனத்துக்கு தரகுப் பணம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விமானப் படைக்கு, 36 ரபேல் போர் வானூர்திகள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்தநிலையில், பிரான்ஸ் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் பிரான்ஸ் வானூர்தி நிறுவனத்தின், 2017ம் ஆண்டுக்கான கணக்குகளை ஆய்வு செய்ததில், 8.62 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்திய ஆயுத இடைத் தரகர் சுஷேன் குப்தாவின், நிறுவனத்திற்கு 4.31 கோடி ரூபா கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ரபேல் போர் வானூர்திகளின் 50 மாதிரிகளைத் தயாரிக்க, சுஷேன் குப்தா நிறுவனத்துக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதும், மாதிரிகள் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
பிரான்ஸ் லஞ்ச தடுப்பு பிரிவின் இந்த அறிக்கையினால், இந்திய பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.