சஹ்ரான் ஹாசிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு சிறிலங்கா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த நபர்களை தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வசித்துவந்த குறித்த நபர்கள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க வாய்ப்புகள் பல இருந்த போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாவனெல்லவில் புத்த சிலை உடைப்புடன் தொடர்புடைய பலர் ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்த நேரத்தில் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நாட்டில் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.