தமிழ்ப் பேசும் மக்கள் நாட்டை துண்டாட கோரவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முப்பது வருடகாலப் யுத்தத்தின் பின்னர் தமிழ்ப் பேசும் மக்கள் போர்க்கால குறிக்கோள்களை விட்டு நீதி, நியாயம், மதிப்பு, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் ஒரே நாட்டுக்குள் தொடர்ந்து வாழ முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் தற்போது நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. ஒரே நாட்டில், நடைமுறையில் இருக்கும் வித்தியாசத்தை, வேற்றுமையை, தனித்துவத்தைப் பேணி பல்லினங்கள் ஒருமித்துப் பயணிக்க முடியுமா என்ற விடயத்தையே ஆராய்ந்து கொண்டு வருகின்றனர்.
அவர்கள் நாட்டைப் பிளவுப்படுத்துவதற்கு கோரவில்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம், நாட்டைப் பிளவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வல்லரசு நாடுகளுக்கும் இல்லை.
பொதுவாக நாடுகள் பிளவுப்படுவதை சர்வதேச நாடுகளும் எதிர்ப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.