பாம் எண்ணெய் இறக்குமதிகளை நிறுத்தும் சிறிலங்காவின் முடிவு தமது நாட்டின் எண்ணெய்த் தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மலேசியாவின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டாக்டர் மொஹமட் கைருதீன் அமன் ரசாலி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2இலட்சம் தொன் பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதில் பெரும் பங்கு இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், பாம் எண்ணெய் வகைகளை சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில், நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அத்தோடு,முள்ளு தேங்காய் செய்கைக்கும் முழுமையாக தடை விதிப்பதுடன், ஒரு தடவைக்கு 10 சதவீதம் என்ற வகையில் முள்ளு தேங்காய் செய்கையை முழுமையாக அகற்றி, அதற்குப் பதிலாக இறப்பர் அல்லது சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான ஒரு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பையடுத்து மலேசியாவின் அமைச்சர் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.