இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் குறித்து நீதி விசாரணை வேண்டுமென மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்படாதது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேநேரம், மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மௌனம் சகல தமிழர்களையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட 08 விடயங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் கிறிஸ்தவ திருச்சபையின் அதி உத்தமர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னாள் ஜனாதிபதியை மிக கீழ்த்தரமாக விமர்சிக்கின்றார்.
ஒரு மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அந்தஸ்தை கடந்து அவரால் உதிர்க்கப்படுகின்ற வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
மேலும், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் எத்தனை பொதுமக்கள், குழந்தைகள் சாகடிக்கப்பட்டனர், எத்தனை ஆயிரம் பேர் மரணத்தை தழுவினர்.
ஏன் இவர்களுக்காக ஒரு நீதி விசாரணை வேண்டும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
அத்தோடு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சிங்கள கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா? அல்லது உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா? என்ற கேள்வி உள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள். தமிழ் ஆராதனைகள் நடைபெறுகின்ற போதுதான் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றது. அதனையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.