சிறிலங்காவுக்கு திரும்புவோர் வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில், வெளிவிவகார அமைச்சினால், உள்வரும் நடைமுறைகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், அவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத, வெளிநாட்டு குடியுரிமை கொண்ட அவர்களின் பிள்ளைகள், இலங்கை கப்பல் மாலுமிகள், ஆகியோர், வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றின் முன் அனுமதியைப் பெறாமலேயே நாடு திரும்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நிர்வகிக்கக் கூடியளவு பயணிகளின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அந்தந்த விமான நிறுவனங்கள் மூலமாக, உள்ளூர் தனிமைப்படுத்தல் மற்றும் தேவையான ஏனைய வசதிகளை சமாளிக்கும் வகையில் பயணிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பார்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.