சூடானின் மேற்கு டாபூர் (Darfur) மாகாணத்தில், இனக்கலவரத்தை அடுத்து, அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை எல் கிரினா நகரில், (El Geneina) அராபிய இனக் குழுக்களுக்கும், அராபியர் அல்லாத மசாலிட் (Massalit) இனக் குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்களில், குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதன் பின்னர், வேறு இரண்டு நகரங்களிலும் துப்பாக்கிச் சண்டைகள் மூண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மோதல்கள் நிறுத்தப்படும் வரை அங்கு மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக ஐ.நா அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சூடான் அரசு மேற்கு டாபூர் மாகாணத்தில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது.