சிறிலங்காவில் பெருகிவரும் சீன ஆக்கிரமிப்புகளால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலவீனமுற்றுள்ள அரசாங்கம் அதிகாரத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் மீண்டும் ஒரு சமூகத்திற்கு எதிரான வன்முறைகளைத் தூண்டலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா குறித்து வெளிநாட்டவர் மத்தியில் நல்லதொரு எண்ணப்பாடு இருந்தாலும், இலங்கையர்கள் சக இலங்கையர்களிடம் அன்பாக இருப்பதில்லை என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
காலத்துக்கு காலம் மலையக இலங்கையர்கள், தமிழர்கள், பறங்கியர்கள் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ரீதியல் தமிழர்கள் கல்வி கற்க முடியாத, விவசாயம், ஏனைய வியாபாரங்களில் ஈடுபட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டதாகவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, இன்று வெவேறு நாடுகளில் நல்ல நிலைமையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும், பெரும்பான்மை சமூகத்தை அவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.