யாழ்ப்பாணம் மாநகரசபையினால், உருவாக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட மாநகர காவல்படை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினர் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், மணிவண்ணன் நேற்று மாலை ஊடகங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல்படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று தொடக்கம் செயற்படவிருந்த இந்த மாநகர காவல்படை, நேற்று நல்லூரில் பரீட்சார்த்தமாக பணியில் ஈடுபட்டிருந்தது.
தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த நீல வண்ண சீருடையை அவர்கள் அணிந்திருந்த நிலையிலேயே கொழும்பில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, யாழ். மாநகர ஆணையாளர், வரி அறவீட்டாளர், மற்றும் காவல்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஐந்து பேரும், நேற்று மாலை யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரிக்கப்பட்டு, வாக்குமூலம பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநகர முதல்வர், மணிவண்ணனும், நேற்று மாலை யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்குச் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.