யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணனின் திட்டமிட்ட கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாநகர சபைகளைப் போன்று, யாழ்ப்பாணம் மாநகர சபையும் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முனைகின்ற போது இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என்றும், சிறிலங்கா அரசு இந்தக் கேவலமான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருப்பதற்கே சிறிலங்கா அரசு விரும்புகிறது. அதன் வெளிப்பாடாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகவும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த கைது சம்பவம் இனவாத நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது எனவும் அவர் கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக் கொள்ள முடியாத சிங்கள அரசு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளதாக, ரெலோ தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், யாழ் மாநகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கிய காவல்படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அரசினால் ஒரு மாநகர சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டை செய்ய முடியவில்லை, அதனை ஒரு தமிழன் செய்து விட்டான் என்ற காழ்புணர்ச்சியில் இந்த கைது நாடகம் அரங்கேறியுள்ளது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டனம் வெளியிட்டுள்ள அதன் தலைவர் மனோ கணேசன், கைதுக்குப் பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடமாகாண ஆளுநர் எடுத்து, நிதானமாக நடந்து கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.