கொழும்பு மாநகர சபையைப் பின்பற்றியே யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டதாக மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் கண்காணிப்பு காவலர்கள் மீதான விசாரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீருடை வழங்கிய விடயத்தில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிப்பதற்காகவே மாநகர சபை ஊழியர்களை பணியில் அமர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பாக தம்முடன் கலந்துரையாடப்படாமையே இந்தப் புறக்கணிப்பிற்குக் காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்குச் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்றே சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமது கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.